என் அம்மாவின் நினைவலைகள் ---பகுதி 2.
திருமணம் அவசரமாக முடிந்துவிட்டதே,
என்ன,அம்மா நினைத்தீர்கள் - என்றேன்,
எல்லாம் விதிப்படியே என்றார்.
சமாதானம் வேறு,
ஜாதகம்,பொருத்தம் பார்த்த கல்யாணங்களும் ,
தலை எழுத்து சரி இல்லை என்றால்,
நிம்மதி இல்லையே என்று.
அம்மா,கர்நாடக சங்கீதம் பயின்றுள்ளார்.
ஹார்மோனியம் வாசிப்பார்.
புகுந்த வீட்டில் இதற்கெல்லாம் தடை.
பெரிய குடும்பம்.
அம்மாவிற்கு பின்னர்தான் விவரம் தெரிந்துள்ளது.
வசதிகள் அதிகம். பாட்டி வழி சொத்து.
எவ்வித உழைப்பும் இன்றி அழித்து வந்துள்ளனர்.
சீட்டு விளையாட்டு. விளையாட வருபவர்களுக்கும் சேர்த்து போண்டா,பஜ்ஜி ,காபி ,
வருமானம் இல்லை.ஆஸ்திகள் கரைந்து கொண்டேவந்தது.
உறவினர்கள் கூட்டமும்.
இறுதியில் மிஞ்சியது வீடு மட்டும்.
அம்மாவிற்கு தாய் வீட்டு சீதனத்தில் மிச்சம் இருந்தது,
சங்கீத ஞானமும் ,சம்ஸ்கிருத அறிவும்.
அம்மாவின் நிலை அறிந்த பழனி கிளை லக்ஷ்மி விலாஸ் வங்கி மேலாளர் வக்கீல்
ராமச்சந்திர ஐயர் மனைவி ஆலோசனை பேரில்,
தெரிந்த சமஸ்கிருத எழுத்தறிவைக் கொண்டு,
ஹிந்தி வகுப்புகள் நடத்த ஆரம்பித்துள்ளார்.
மாதம் நாலணா,எட்டணா கட்டணம் தான்.
குடுபத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு,
பலவித அபவாதங்களுக்கு இடையில் ஹிந்தி தேர்வுகளும் எழுதிஉள்ளார்.
நான் அம்மாவிற்கு இரண்டாவது பிள்ளை.
எனக்கு மூன்று வயது. அப்பொழுது,
என் தாத்தா,பாட்டி,பெரியப்பா நாத்தனார் அப்பா அனைவரின் எதிர்ப்புமிக்க
சம்மதத்துடன் பள்ளியில் சென்று படித்துள்ளார்.
மடி ஆசாரம் வேறு, அவ்வகையில் ஓர்ப்படி,நாத்தனார் கொடுமை.
புத்தகம் பைண்டிங் செய்த துணி ஆசாரத்திற்கு பங்கம் என்று,
பழனி பெண்கள் பள்ளி ஆசிரியை கார்த்திகாயினி அம்மாவிற்கு முழு ஆதரவு.
ஒருநாள் நான் அம்மாவுடன் பள்ளிக்குச்சென்றதும் ,
அக்கால சூழலின் எக்காள -ஏளனத்தால் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி.
இதையெல்லாம் அம்மா சிரித்துக்கொண்டே சொல்வார்.
ஒருநாள் அப்பா கை எழுத்துப்போடவே தெரியாது என அறிந்து
கை எழுத்துப்போட சொல்லிக்கொடுத்துள்ளார்.
அவர் எது செய்தாலும் வீட்டு வேலைகள் செய்து முடித்த பின்னர் தான்.
அம்மா இரவு 12க்கு மேல் தான் அப்பாவை சந்திக்க முடியுமாம் .
காலை ஐந்து மணிக்கே எழுந்திருக்கவேண்டும்.
இந்தக்காலத்தில் நடக்குமா? வழக்கு நடக்கும்.
அவர்களுக்கு அம்மாவை படிக்க அனுமதித்ததே பெரிய மிகப்பெரிய ஹிமாலய சலுகை.
எல்லோரும் சொல்வார்களாம் ,எங்கள் அனுமதியே ,உனக்கு வெகுமதி.
இல்லையென்றால் உன்னால் படித்திருக்க முடியாது.
இந்த ஒரு சங்கட நிலையிலும் அவர் சிரித்தே சமாளித்து ,
தன் சோகக்கதையை, நகைச்சுவையாகவே கூறுவார்.
அப்பா ரொம்ம நல்லவர்தான். அவரை அப்படி வளர்த்துவிட்டனர்.
சேதுராமனை,ஆரம்பத்தில் சோதுராமன் என்று எழுதுவாராம்.
எங்கள் வீட்டில் அனைவரும் சாப்பாடு பிரியர்கள் என்பார் சிரித்துக்கொண்டே.
அம்மாவின் நினைவு அலைகள் தொடரும்.