சனி, டிசம்பர் 27, 2014

வருக!வருக!நலம் பல தருக!

                                                                                   
நாட்டில்  பிரச்சனைகள்  பல இருக்க ,

நாமதில்  நாட்டம் செலுத்தாமல் ,

மதங்கள் ,மதவேறுபாடுகள்  என்று 

மனதை இறைவனில் ஒருமைப் படுத்தாமல்,

இறைவனில் உயர்ந்தவன் யார் என்றே 

இரைச்சலைப்போட்டு  அடித்து உதைத்து 

இதுதான் மத ஒற்றுமை என்றே ,

இறைவனை அழகுற அமைத்து ,

அலைகடலில் ஏற்யும் கூட்டம்.

அதில் இட்ட முதலீடு பல ஆயிரம் கோடி ,

அது நாட்டு நலத்திட்டத்தில் போட்டாலே 

இறைவனருள் இங்கே கிட்டும்.

நாட்டின் முதுகெலும்பாம்  விவசாயம்,

நாளும் நலிந்துவரும் கொடுமை பாரீர்.!

நமக்கு அன்னமிடும் விவசாயி ,

நாண்டுக்கிட்டு சாகும் கொடுமை இங்கே.

தொழில் வளம் என்றே நாட்டுவளம் அழிக்கும்

பிழை புரிவோர் பல தலைவர்கள்.

பேழை வந்தாலே அனைத்தும் மறக்கும் 

வெளிநாட்டு முதலீட்டுக்கு வழிவகுக்கும் திட்டங்கள்.

பலசரக்குக் கடைக்கே பல்லிளித்து 

வால் பிடித்து  வால்மார்ட்டே  மக்களுக்கு 

நலமளிக்கும் என்று நயவஞ்சக நாயகர் கூட்டம்.

நம் மக்கள் நம் முதலீடு நம் தொழில் வளம்  என்று 

நாடா நாட்டுவளம் ,வந்த அன்னியர் கொடுத்த 

வாசனைக்கும் ,மது பானங்களுக்கும் ,அரைகுறை  

ஆடைகளுக்கும்  அவசரமாக அங்கீகாரமளிக்கும்

தன்னலம் கருதும் தானைத்தலைவர்கள்,

இதெல்லாம் சிந்திக்க விடாமல் ,

மக்களைத் திசை திருப்பும்  மதத் தலைவர்கள் 

மதக் கலவரங்கள் ,கற்பழிப்புகள் ,

வழக்கு என்று ஒன்று போட்டு திசை திருப்பி 

ஜாமீனில் விடுவித்து ஜாம் -ஜாம் என்றே 

அரசியல் தலைவர்களை வாழ்த்தும் கூட்டம்.

அரங்கத்தில் திட்டினாலும் ,ஊழல் அரங்கத்தில் 

அந்தரங்க நட்பே கண்டோம்.

சிந்திப்பீர் மக்களே!
கடவுள்களில் உயர்வென்றும் தாழ்வென்றும் 
உண்டோ! கேளீர்!
பூவினில் மாற்றபில்லை .
நீர் நிலையினில் மாற்றமில்லை ,
நிலம் ஒன்றே ,நலம் ஒன்றே ,
ஒளிதரும் பரிதியும் நிலவும் ஒன்றே.

அனைத்தையும் படைப்பவன் ஆண்டவன் ஒருவனே என்றே 

ஏற்கும் வையகம் மதம் என்ற ஒன்றால் 

கொலைகளைச் செய்யும்பாதகம்.

இறைவன்  எங்கே ?என்ற நாத்திகனுக்கு கொண்டாட்டம்.


ஆத்திகம் என்றாலே அபாயம் தான் நாட்டுக்கும் அவனிக்கும்.

அல்லா ஒன்று ஓர் இயக்கம் ,ஏசு என்று ஓர் இயக்கம் 

சிவன் என்று ஓர் இயக்கம் ,விஷ்ணு என்று ஓர் இயக்கம்.

மனித ஒற்றுமை ,நேயம் ,  கழிவிரக்கம், என்றில்லா 

இறைவன் இயக்கம் இருந்தாலென்ன !ஒழிந்தால் என்ன!

இறைவனே!இதுதான் உன் லீலை என்றால் -நீ 

தேவை இல்லை வையகத்தில்.
உன்னிடம் ஓர் வேண்டுகோள் !

வேற்றுமை தர்ம மத வேறுபாடற்ற வையகம் தேவை.

உன் பெயரில் வெறியாட்டம் ஆடும் கொலை-கொள்ளையர்களை 

அளிக்கவே உன் ஒருமுக  படைப்பு வேண்டும்.
வருக!வருக!நலம் பல தருக!