புதன், நவம்பர் 14, 2012

என் அம்மாவின் நினைவு அலைகள்.பகுதி--4

1956 இல்  அம்மாவிற்கு சிங்கம்புணரி   உயர் நிலைப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியர் பணி  கிடைத்தது.
பின்னர்  கொம்புக்காரநேந்தல் உயர்நிலைப்பள்ளியில் .அதெல்லாம் மிகவும் கஷ்டமான சூழல்.  இதற்கிடையில் கர்ப்பம் வேறு.இன்றைய காலம் போல் வசதியில்லை.ஆண்டுக்கு ஒரு குழந்தை.அதை சரிவர கவனிக்க முடியாத சூழல். இரக்கமற்ற உதவாத உறவினர்கள்.ஓராண்டு ஆசிரியர் பயிற்சி அனுப்பக் கூட விரும்பாத தெரியாதவர்கள்.பின்னர் பழனிக்கே திரும்பி வந்து அருகில் உள்ள நெய்க்காரப்பட்டி,ஆயக்குடி,கோரிக்கடவு  பள்ளிகளில் பணியாற்றினார்.எனக்குப்பின் பிறந்த ஆறு பெண் குழந்தைகள் அகாலமரணம்.மனவேதனை,புகுந்த வீட்டுக்கொடுமை.அம்மாவிற்கு ஆதரவு என் மாமா நாகராஜன்,பாட்டி,தாத்தா,மற்றொரு மாமா சுப்பிரமணியன்,அப்பா. ஆனால் அம்மா படுத்த படுக்கையாக நோயிருக்கும்போது அப்பா  தான் முழு கவனிப்பு. என் மாமா,பாட்டி அடிக்கடிவந்து பார்த்துவிட்டு செல்வார்கள்.

ஆஹா!  என் அப்பாவின் அப்பா தாத்தா பற்றி கூற மறந்துவிட்டேனே! அவர் ஒரு தெய்வீக மனிதர். அவர்  எனக்குத்  தெரிந்து தனியாகவே வீட்டின் ஒரு ஓரத்தில் சமைத்து சாப்பிடுவார்.அந்த பெரிய வீட்டில் மூன்று தனிக்குடித்தனங்கள் .பெரியப்பா,சின்ன பெரியப்பா,என் அப்பா. ஆனால்,எங்கள் தாத்தா பார் வீட்டிலும் சாப்பிட்டது கிடையாது.அவரிடம் தான் நான்,பெரியப்பா குழந்தைகள் வாங்கி சாப்பிடுவார். எங்கள் வீட்டுப் பூட்டை உடைத்து தாரளமாக  பலசரக்கு சாமான்கள் திருடுபோகும்.அம்மா பணி முடிந்து திரும்பியதும் வீடு போர்க்களமாகி விடும்.ஆனால் தனியாக வேறு வீட்டிற்குப் போக விடமாட்டார்.ஒரு முறை  வீட்டை காலி செய்யும் பொழுது போககக்கூடாது என்று
வண்டி சக்கரத்தில் படுத்துக் கொண்டார்.

தொடரும்.

என் அம்மாவின் நினைவு அலைகள்--பகுதி-3

அப்பா பற்றி அம்மா புகழ்ந்து பேசுவார். அவர் அப்பா பற்றி,

அவர் கடினமாக உழைக்கிறார். 
அவர் வருமானம் தானம் ,தர்மம்,அண்ணா குடும்பத்திற்கு செல்கிறது என்பார். 
இது சம்பந்தமாக சிலசமயம் சண்டை வாக்குவாதம் நடக்கும்.
இருந்தாலும் அப்பா என்றால் அம்மாவிற்கு உயிர்.

என் அப்பா  தன்  மரணத்தை புரிந்துகொண்டு  சொன்னார்,
டேய் ,அனந்து  போன வாரம் 
,நான்  வேலை  செய்யும்  இடத்தில் விடிய,விடிய இனிப்புகள் செய்தேன்.
அதனால் தான் கண் கெட்டுவிட்டது .
வேலை செய்து பணம் கேட்டேன்.
அவர்கள் உன் அண்ணன் வாங்கிச்சென்று விட்டார் என்றனர் .
என் மனது மிகவும் கெட்டுவிட்டது  என்றார்.
தன் தங்கையையும் வெறுப்பாக பேசினார்.
மனிதர்கள் தங்கள் தம்பி இடமும் இவ்வளவு இரக்கமற்று நடந்துகொள்வார்கள் 
என்பதை என் அப்பா தன் எழுபத்தைந்தாவது வயதில் புரிந்து கொண்டார்.
அவர் எல்லோருக்கும் உதவி உள்ளார்.
 தன்  குடும்பத்தை விட  அதிகமாக என்பது 
அப்பாவின் மரணத்திற்குப்பின் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் கூறினார்கள் .
அதுதான் செத்தால் தெரியும் என்று சொன்னார்களோ என்னவோ,அவர் இறந்த பின் அவர் இழப்பு மிகவும் பேரிழப்பாக இருந்தது.அம்மா மிகவும் உடைந்து போனார். ஆனால் எதோ ஒரு சக்தி அவருக்கு ஒரு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தந்தது .

என் அம்மாவின் நினைவலைகள் ---பகுதி 2.


என் அம்மாவின் நினைவலைகள் ---பகுதி 2.

திருமணம்  அவசரமாக முடிந்துவிட்டதே,
என்ன,அம்மா நினைத்தீர்கள் - என்றேன்,
எல்லாம் விதிப்படியே என்றார்.
சமாதானம் வேறு,
ஜாதகம்,பொருத்தம் பார்த்த கல்யாணங்களும் ,
தலை எழுத்து சரி இல்லை என்றால்,
நிம்மதி இல்லையே  என்று.
அம்மா,கர்நாடக சங்கீதம்  பயின்றுள்ளார்.
ஹார்மோனியம் வாசிப்பார்.
புகுந்த வீட்டில் இதற்கெல்லாம்  தடை.
பெரிய குடும்பம்.
அம்மாவிற்கு பின்னர்தான் விவரம்   தெரிந்துள்ளது.
வசதிகள் அதிகம். பாட்டி வழி  சொத்து.
எவ்வித உழைப்பும் இன்றி அழித்து  வந்துள்ளனர்.
சீட்டு விளையாட்டு. விளையாட வருபவர்களுக்கும் சேர்த்து  போண்டா,பஜ்ஜி ,காபி ,
வருமானம் இல்லை.ஆஸ்திகள் கரைந்து கொண்டேவந்தது.
உறவினர்கள் கூட்டமும்.
இறுதியில் மிஞ்சியது வீடு மட்டும்.
அம்மாவிற்கு தாய் வீட்டு சீதனத்தில் மிச்சம் இருந்தது,
சங்கீத ஞானமும் ,சம்ஸ்கிருத  அறிவும்.
அம்மாவின் நிலை அறிந்த  பழனி கிளை லக்ஷ்மி விலாஸ் வங்கி மேலாளர் வக்கீல் 
ராமச்சந்திர ஐயர்  மனைவி  ஆலோசனை பேரில்,
தெரிந்த சமஸ்கிருத எழுத்தறிவைக்  கொண்டு,
ஹிந்தி வகுப்புகள் நடத்த ஆரம்பித்துள்ளார்.
மாதம் நாலணா,எட்டணா  கட்டணம்  தான்.
குடுபத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு,
பலவித அபவாதங்களுக்கு இடையில் ஹிந்தி  தேர்வுகளும்  எழுதிஉள்ளார்.
நான் அம்மாவிற்கு இரண்டாவது பிள்ளை.
எனக்கு மூன்று வயது. அப்பொழுது,
என் தாத்தா,பாட்டி,பெரியப்பா நாத்தனார் அப்பா அனைவரின் எதிர்ப்புமிக்க 
சம்மதத்துடன்  பள்ளியில் சென்று படித்துள்ளார். 
மடி ஆசாரம்  வேறு, அவ்வகையில் ஓர்ப்படி,நாத்தனார் கொடுமை.
புத்தகம் பைண்டிங் செய்த துணி ஆசாரத்திற்கு பங்கம் என்று,
பழனி பெண்கள் பள்ளி ஆசிரியை கார்த்திகாயினி அம்மாவிற்கு முழு ஆதரவு.
ஒருநாள் நான் அம்மாவுடன் பள்ளிக்குச்சென்றதும் ,
அக்கால சூழலின் எக்காள -ஏளனத்தால்  பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி.
இதையெல்லாம் அம்மா சிரித்துக்கொண்டே சொல்வார்.
ஒருநாள் அப்பா கை எழுத்துப்போடவே தெரியாது என அறிந்து 
கை எழுத்துப்போட சொல்லிக்கொடுத்துள்ளார்.
அவர் எது செய்தாலும் வீட்டு வேலைகள்  செய்து முடித்த பின்னர் தான்.
அம்மா இரவு 12க்கு மேல் தான் அப்பாவை சந்திக்க முடியுமாம் .
காலை ஐந்து மணிக்கே எழுந்திருக்கவேண்டும்.
இந்தக்காலத்தில் நடக்குமா? வழக்கு நடக்கும்.
அவர்களுக்கு அம்மாவை படிக்க அனுமதித்ததே பெரிய  மிகப்பெரிய ஹிமாலய சலுகை.
எல்லோரும் சொல்வார்களாம் ,எங்கள் அனுமதியே ,உனக்கு வெகுமதி.
இல்லையென்றால் உன்னால் படித்திருக்க முடியாது.
இந்த ஒரு சங்கட நிலையிலும் அவர் சிரித்தே சமாளித்து ,
தன்  சோகக்கதையை, நகைச்சுவையாகவே கூறுவார்.
அப்பா ரொம்ம நல்லவர்தான். அவரை அப்படி வளர்த்துவிட்டனர்.
சேதுராமனை,ஆரம்பத்தில் சோதுராமன் என்று எழுதுவாராம்.
எங்கள் வீட்டில் அனைவரும் சாப்பாடு பிரியர்கள் என்பார் சிரித்துக்கொண்டே.
அம்மாவின் நினைவு அலைகள் தொடரும்.

என் அம்மாவின் நினைவலைகள்--பகுதி-1.


என் அம்மாவின் நினைவலைகள்--பகுதி-1.

என் அம்மா 
உழைப்பு,
ஊதியம்  இல்லா உழைப்பு.
13 வயதில் திருமணம்.
அம்மா சொல்வது ஒரு நகைச்சுவையாக இருந்தாலும்,
அவர் ஆழ்மனம் எப்படிப்பட்டது;
அவருக்கு எப்படி பொறுமை;
அவரது திறமை எப்படி புகுந்தவீட்டில்,
தூசி துருபிடித்தது என்பதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அவரது திருமணம் நிச்சயிக்கப்படவில்லை.
பெற்றோர்கள் கலந்து பேசவில்லை. 
அது காதல் திருமணமும் அல்ல.
ஆச்சரியமாக உள்ளதா?
அதுதான் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணமோ?
என் கொள்ளுப்பாட்டி பழனி சென்றுள்ளார்.
அங்கு சொந்தக்காரர்வீட்டிற்கு சென்றுள்ளார்.
என் அத்தைக்கு திருமணம்.
என் பாட்டி பேத்தியைப்பற்றி கூற,
என் தாத்தா என் பெண் கல்யாணத்துடன் திருமணம் செய்யலாம்.
பெண்ணை அழைத்துவாருங்கள் என்றாராம்.
பெண் பார்க்கும் சம்பிரதாயம் இல்லை.
பெற்றோர்களும் சந்திக்கவில்லை.
நேரடியாக திருமணமண்டபம்.
பழனியிலிருந்து என் கொள்ளுப்பாட்டி காமுப்பாட்டி என்றால்
 வத்தலக்குண்டில் எல்லோருக்கும் தெரியும். நடந்தே சென்றுள்ளார்.
அவசரக்கல்யாணம்.

திருமண அழைப்பிதல் அடிக்கவில்லை. 
உற்றார்-உறவினர்களுக்கு தகவல்மட்டும்.
அப்பொழுது தொலை பேசி,கைபேசி,கணினினி, எதுவும் கிடையாதே,
போக்குவரத்து  சாதனங்களும் இல்லை. 

 நேரடியாக அனைவரும்  திருமணமண்டபம் சென்றுள்ளனர்.
அங்கு இரு    மணமேடை . இரண்டிலும் மாப்பிள்ளைகள்.
அவசர அவசரமாக அலங்கரித்து,
மண  மேடைக்கு பெண்ணை அனுப்பினால்.
என் அம்மா, எதுவும் புரியாமல்,
நாத்தனார் மாப்பிள்ளை அருகில் உட்கார,
என் மாமா பார்த்த பெண் வேறு,அமர்ந்த பெண் வேறு,என,
கோபமாக எழுந்திருக்க,
அதற்குள் சமாதானம் செய்து ,
எங்கம்மாவை,தரதர என இழுத்து ,,என் அப்பா அருகில் 
உட்காரவைத்துள்ளனர். இதற்குள் என் தாய் மாமாவிற்கு ஒரு தவிப்பு.
கோத்திரம் கூட கேட்கவில்லையே என.
அதை எங்கம்மா தமாசாகக் கூறுவார்--
கோத்திரம் ஒன்றே இருந்தால், "ஓடிவா"- என்று மாமா கூறினாராம்.
அம்மா கௌண்டிண்யம்.
நாங்க கௌசிகம்.
மாமா ,"கௌ" என்றதும் எழுந்தாராம்.
அம்மா  தயாராக .
ஓட்டப்பந்தய வீராங்கனைபோல் தயாரானாராம்.
"ண்டிண்யம்  "என்றதும்,மாமா அமர,அம்மாவும் அமர்ந்தாராம்.
அம்மா கருப்பு.அப்பா சிவப்பு.
இதுவேறு பிரச்சனை.
அப்படி இப்படி திருமணம் முடிந்தது
 பின்னர் தான் வயது வித்தியாசம்,ஜாதகம் 
எல்லாம் பார்த்துள்ளனர். கிட்டத்தட்ட 15-16 வயது வித்தியாசம்.
ஏக நக்ஷத்திரம்.
திருமணம் ஒருவியப்பாக முடிந்தது,
அம்மா தன வேதனைகளை மறந்தோ,மறைத்தோ,
தமாஷாக தன் திருமணம் நடந்ததைக் கூறுவார்.
அவர் மன தைரியம், அந்த 12-13 வயது. அவர் பட்ட பாடு.
தொடரும்.