வியாழன், செப்டம்பர் 01, 2016

வன் முறை

இன்றைய தமிழை பற்றி அறிய இரண்டுநிமிடம் ஒதுக்கி படி தமிழா!!!                    தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குப் புதியவராக வந்தார் ஒருவர். ஒரு கடைக்கு போனார். ஒரு பொருளைக் காட்டி, “இது என்ன விலை அய்யா?” என்றார். கடைக்காரனுக்குக் கோபம் வந்தது. “என்ன அப்பா, பெரிய சீமான் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறாயோ?” என்றான். தஞ்சாவூராக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பேசாமல் நின்றார். அவருக்கும் கோபம் வந்தது. சிறிது அமைதிக்குப் பிறகு கடைக்காரன் அவரைப் பார்த்து, “மனிதனுக்கு மனிதன் சமமாக எண்ணிப் பேசு அப்பா. அய்யா கிய்யா என்று இப்படிப் பேசுகிறாயே?” என்றான். பக்கத்திலிருந்த ஒருவர் அப்போது குறுக்கே வந்து தஞ்சாவூர்க்காரரைப் பார்த்து, “நீங்கள் வெளியூர்க்காரர்போல் தெரிகிறது. இங்கே அய்யா என்று கூப்பிட்டால் கோபம் வரும். அப்படிப் பேசாதீர்கள்” என்றார். உடனே தஞ்சாவூர்க்காரர் இவரைப் பார்த்து, “கடைக்காரர்மட்டும் என்னை அப்பா கிப்பா என்று ஒருவகையாகப் பேசுகிறாரே அதுமட்டும் தகுமா?” என்றார். அப்போதுதான் ஒருவர்கொருவர் கொண்ட கோபத்தின் காரனம் விளங்கியாது.
தஞ்சாவூர் தமிழ்நாட்டில் உள்ள நகரம். சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்.அப்படி இருந்தும், 'அய்யா' என்றால் சென்னைத் தமிழர்க்குக் கோபம் வருகிறது. 'அப்பா' என்றால் தஞ்சாவூர்த் தமிழர்க்குக் கோபம் வருகிறது. இருவரும் பேசுவது ஒரே மொழியாக இருந்தபோதிலும், இப்படி இடத்துக்கு இடம் பேச்சில் வேறுபாடு இருப்பதைக் காணலாம்.
திருநெல்வேலியில்,"ஒரு குவளையில் குடிக்கத் தண்ணீர் கொண்டுவா" என்பார்கள்;"வாளியால் தண்ணீர் கொண்டுவா'"என்பார்கள். வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு,செஙகல்பட்டு ஆகிய ஜில்லாக்களில் வாழும் தமிழர்களுக்குக் 'குவளை' என்றாலும் தெரியாது; 'வாளி' என்றாலும் தெரியாது. 'டம்ளர்', 'பக்கெட்' என்று ஆங்கிலச்சொற்களைச் சொன்னால்தான் தெரியும். தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் குடிநீர்க்குப் பயன்படும் நீர் நிலையை 'ஊருணி' என்று சொல்வார்கள், வயல்களில் பயிருக்குப் பயன்படுமாறு நீர் தருவதைக் குளம் என்று சொல்வார்கள். மற்றப் பகுதிகளில் குடிதண்ணீர் தருவதைக் குளம் என்றும், பயிருக்குப் பயன்படுவதை ஏரி என்றும் சொல்வார்கள். இப்படி இடத்துக்கு இடம் சில சில சொற்கள் வேறு வேறு பொருளில் பேசப்படுவதைக காணலாம். நூற்றுக்கு 90,95 சொற்கள் எல்லா இடங்களுக்கும் பொதுவாக ஒத்திருக்கும். ஆனால், நூற்றுக்கு 10 அல்லது 5 சொற்கள் வெவ்வேறாக இருக்கும். இப்படி வெவ்வேறாக உள்ள சொற்களை என்ன என்று சொல்வது? அவைகளையே இடப்பேச்சுக்கள்(dialects) என்று சொல்வார்கள்.
ஒரு மலைக்கு இந்தப் பக்கம் ஓர் ஊரும் அந்தப் பக்கம் ஓர் ஊரும் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு ஊரிலும் உள்ளவர்கள் ஒரே மொழி பேசுகின்றவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாளடைவில் இவர்களுடைய பேச்சில் ஒற்றுமை இருந்த போதிலும் சில வேறுபாடுகள் அமைந்து விடும். இதற்குக் காரணம் அந்த ஊர்களுக்கு இடையில் மலை நின்று போக்குவரவுக்குத் தடையாய்ப்பிரித்த பிரிவே ஆகும். ஆறு முதலியவைகளாலும் இப்படிப் பிரிவு ஏற்பட்டு, இடப்பேச்சு வேறு வேறாக அமைவது உண்டு. ஒரு ஜில்லாவுக்கும் மற்றொரு ஜில்லாவுக்கும் உள்ள பேச்சிலும் இப்படியே இடம் காரணமாக வேறுபாடு ஏற்படும்.
மலையாள மொழி ஒரு காலத்தில் தமிழாகவே இருந்ததுதான். ஆனால், மேற்குத் தொடர்ச்சிமலை பிரித்தபடியாலும், அரசாங்கம் வேறாக இருந்ததாலும், அந்த நாட்டு மக்கள் பேசும் பேச்சு மெல்ல மெல்ல மாறிவிட்டது. நூற்றுக்கு ஐந்து பங்காக இருந்த வேறுபாடு நூற்றுக்கு ஐம்பதாக ஆகிவிட்டது. அதனால் அங்கே தமிழ் மறைந்து வேறு தனிமொழியாக ஏற்பட்டுவிட்டது. இடப் பேச்சாக உள்ள ஒரு மொழியின் பிரிவு, நாளைடைவில் இப்படி வேறொரு மொழியாகவே மாறுவது உண்டு. தெலுங்கும் கன்னடமும் ஒரு காலத்தில் இப்படி இடப்பேச்சுக்களாக இருந்து மாறி ஏற்பட்டவைதான். நாம் இப்போது தமிழ்நாட்டில் பேசும் பேச்சும் ஒருவகையாக இல்லை. ஆனால், புத்தகங்கள், பத்திரிகைகள், வானொலி முதலிய காரணங்களால், எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவான தமிழ் ஒன்று இருந்துவருகிறது. அதனால் தமிழர் ஒர் இனமாய்ப் பழகமுடிகிறது.
இவ்வாறு, இடப்பேச்சு ஏற்படுவதற்கு இடம் காரணமாக இருப்பது தவிர, வேறு சில காரணங்களும் உண்டு. வியாபாரிகள் பேசுகின்ற பேச்சில் சில தனிப்பண்புகள் உண்டு. வழக்கறிஞர்கள் சட்டத்தில் பழகிப் பேசும் பேச்சில் சில வேறுபாடுகள் உண்டு. சமயத்துறையிலும் இப்படிப்பட்ட இடப்பேச்சுக்களைக் காணலாம். சைவர், வைணவர், கிறிஸ்தவர், முகமதியர் எல்லோரும் தமிழரே ஆனபோதிலும், இவர்களின் சமயத்துறையில் வெவ்வேறு சொற்கள் பேசப்படுகின்றன. பதி, பசு என்றால் சைவர்களுக்குப் பொருள் வேறு. அமுது, திருவடி என்பவற்றை வைணவர்கள் குறிப்பிட்ட பொருளீல் வழங்குகிறார்கள். இவைகளும் இடப் பேச்சுக்களே. அரசியல் வைத்தியம் முதலிய மற்றத்துறையிலும் இடப்பேச்சுக்களைக் காணலாம். உதாரணம் பாருங்கள்: பொதுவான தமிழில் 'வரவு' என்றால் வருதல் என்று பொருள். 'செலவு' என்றால் என்றால் செல்லுதல் என்று பொருள். ஆனால் வியாபாரிகள் பேச்சில் 'வரவு', 'செலவு' என்றால் வந்த பணம், செலவான பணம் என்று பொருள். உங்களுக்கு நன்றாகத் தெரிந்த வேறு உதாரணங்கள் கேளுங்கள்: பொதுவான தமிழில் 'பெயர்' என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், இலக்கணத்தில் 'பெயர்' என்றால், நால்வகைச் சொல்லில் ஒருவகை என்று அறிவீர்கள். 'வினை' என்றால், பொதுவான தமிழில், தொழில்,செயல், வேலை என்று பொருள்படும். ஆனால் சமயத்துறையில் 'வினை' என்றால், ஊழ்வினை என்று பொருளாகிறது. இலக்கணத்தில் 'வினை' என்றால், ஒரு வகைச்சொல்லைக் குறிக்கிறது. இப்படியே ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு துறையிலும், சில சொற்கள் வெவ்வேறாகப் பொருள் உணர்த்தக் காண்கிறோம். இவைகளே இடப்பேச்சுக்கள்.இலங்கையில் உள்ள தமிழர்கள் பேசுவதும் தமிழே. ஆனால் இடப்பேச்சாக அவர்களின் தமிழிலும் சில வேறுபாடுகள் உண்டு. ஓய்வாக என்று நாம் சொல்வதை அவர்கள் 'ஆறுதலாக' என்பார்கள். ஆறுதலாக என்றால் நமக்குப் பொருள் வேறு. 'நாங்கள்' என்பது தன்மைப் பன்மையான சொல். அதில் எதிரில் உள்ளவர்களைச் சேர்த்துப் பேசும் கருத்து இல்லை. 'நாம்' என்பது அப்படி அல்லாமல், எதிரில் உள்ளவர்களையும் சேர்த்துப் பேசும் கருத்து உடையது. ஆனால் இலங்கைத் தமிழில், 'நாங்கள்' என்பதே வழங்குகிறது. அதற்கு நாம் என்பதே பொருளாக உள்ளது.இடப்பேச்சுக்களில், சொற்கள் வேறுபொருள் உணர்த்துவது மட்டும் அன்று. வேறு வேறு வகையாகவே ஒலிக்கப்படுவதும் உண்டு. 'வாழைப்பழம்' என்பதைச் சில இடங்களில் 'வாயப்பழம்' என்று ஒலிக்கிறார்கள். வேறு சில இடங்களில் 'வாளப்பளம்' என்கிறார்கள். இப்படி ஒலி வேறுபடுவதும் இடப் பேச்சாகவே கொள்ள வேண்டும். நிரம்ப நல்லவர் என்பதைச் சில இடங்களில் 'ரொம்ப நல்லவர்' என்பார்கள். சில இடங்களில் 'ரம்ப நல்லவர்' என்பார்கள்.தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் பேசும் சொற்கள் ஒருவகையாக ஒலிக்கப்படும். சாதியை ஒட்டித் தொழில் அமையும் இடங்களில், ஒவ்வொரு சாதியும் வெவ்வேறு வகையாக ஒலிப்பது உண்டு. 'இருக்குது' என்று சிலர் பேசுவார்கள். 'இருக்கு' என்று சிலர் சொல்வார்கள். 'கீது' என்று சிலர் ஒலிப்பார்கள். இவைகளும் இடப்பேச்சுக்களில் சேர்க்கப்பட வேண்டியவைகளே. இவைகளில் எவ்வளவோ தவறுகள் உண்டு. ஒவ்வொரு வகையார் ஒவ்வொரு வகையான தவறு செய்வார்கள்.புத்தகங்களில் உள்ளபடி சொற்களை ஒலிக்காமல், வெவ்வேறு வகையாகக் குறைத்தும் மாற்றியும் ஒலித்தால் அவைகள் கொச்சை ஒலிகள் என்று கூறப்படும். 'ஏன் அடா', 'மூன்று' முதலியவைகளை 'ஏண்டா', 'மூணு' என்றெல்லாம் ஒலிப்பது கொச்சையே ஆகும். 'வந்தது', 'போனது', இழுத்துக்கொண்டு' முதலான சொற்களை 'வந்துச்சி', 'போச்சி', 'இசுத்துக்கினு' என்று கொச்சையாக ஒலிப்பார்கள். இந்தக் கொச்சை ஒலிகளில் சில படிப்படியாகச் செல்வாக்குப் பெற்று நல்ல மொழியாக மாறிவிடுவதும் உண்டு.பாய்கிறது என்பதைப் பாயுது என்றும், பிறக்கிறது என்பதைப் பிறக்குது என்றும் பாரதியார் பாட்டில் கேட்கிறோம் அல்லவா? இவைகளை இலக்கணத்தில் மரூஉ என்று குறிப்பிடுவார்கள். ஆனால் நாகரிகம் குறைந்த தாழ்வான மக்கள் பேசும் பேச்சின் ஒலிகள் இவ்வாறு மரூஉ என்று கொள்ளப்படுவதில்லை. உயர்ந்தவர்கள் - பெரும்பான்மையோர் - கொச்சையாக ஒலிக்கும் ஒலிகளே நாளடைவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.இந்தக் கொச்சைத் தன்மை சொற்களின் ஒலியில் ஏற்படாமல், சொற்களின் பொருளில் ஏற்பட்டால், அவைகள் கொச்சைமொழிகள் (slang) எனப்படும். "பணம் இருந்தால் நடக்கும்" என்று ஒருவன் சொல்ல விரும்புகிறான். ஆனால் அப்படிச்சொல்வதில் புதுமை இல்லை, சுவை இல்லை; ஆகையால் கேட்போரின் கருத்தைக் கவர்வதற்காக அவன் என்ன சொல்கிறான் தெரியுமா? எல்லோரும் நெடுங்காலமாகச் சொல்லி வந்த 'பணம்' என்னும் சொல்லைச் சொல்வதில்லை. அந்தச் சொல்லால் பயன் குறைவு என்று உணர்ந்து, அதற்குப் பதில் 'வெள்ளையப்பன்' என்கிறான். "வெள்ளையப்பன் இருந்தால் நடக்கும்" என்று அவன் மாற்றிச் சொல்லும்போது கவர்ச்சியாக இருக்கிறது. "அடி கொடுப்பேன்", "உதை கொடுப்பேன்" என்று சொல்லாமல், "பூசை கொடுப்பேன்" என்று சொல்லும்போது புதுமையின் கவர்ச்சி இருக்கிறது. வியாபாரத்தில் நஷ்டமாகிவிட்டது என்னும்போது, "மொட்டையாய் விட்டது" என்று சொல்வதும் அப்படியே. பரீட்சையில் தவறிவிட்டான் என்று சொல்லாமல் "பரீட்சையில் கோட் அடித்தான்", "பல்டி போட்டான்" என்று சொல்வதும் அப்படியே. உணவு விடுதியை ஓட்டல் என்று சொல்லாமல் "மாமியார் வீடு" என்று கூறுவதும் அந்த வகையே ஆகும்.ஆனால், இப்போது சொன்ன இந்தப் புதுச்சொற்களைப் பாருங்கள். இவைகளை இடப்பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது. இடப் பேச்சாக இருந்தால், ஒரு ஜில்லாவில், அல்லது ஓர் ஊரில், அல்லது ஒரு துறையில், அல்லது ஒரு கூட்டத்தாரிடத்தில் வழங்க வேண்டும். ஆனால் 'வெள்ளையப்பன்', 'பூசை', 'மொட்டை', 'மாமியார் வீடு' முதலானவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது துறையில் பேசப்படுகின்றவை அல்ல. பழக்கப்பட்டுப்போன பழஞ் சொற்களுக்குப் புதிய உயிர், புதிய கவர்ச்சி தரவேண்டும் என்று நினைக்கிறவர்கள் எல்லாரும் இந்தச் சொற்களைப் பேசுகிறார்கள். ஆகையால் இவைகள் இடப்பேச்சில் அடங்காமல், கொச்சைமொழிகள் என்று குறிக்கப்படும். இடப்பேச்சுக்களைப் பேசுகின்றவர்கள், வேறு பாடுகளை அறியாமலே பேசுகின்றார்கள். அவர்களை அறியாமலே ஊருக்கு ஊர், துறைக்குத் துறை, கூட்டத்துக் கூட்டம் சொற்கள் மாறியிருக்கின்றன. ஆனால், மேலே குறிக்கப்பட்ட கொச்சைமொழிகள் அப்படிப்பட்டவை அல்ல. பேசுவோர் தாங்களாகவே புதுமையாகப் படைத்துப் பேசுகின்ற சொற்களாகும். இடப்பேச்சுக்கள், இயல்பாக மக்களிடையே ஏற்படுகின்றவை. கொச்சைமொழிகள், மக்கள் வேண்டும் என்றே கவர்ச்சிக்காக ஏற்படுத்துகின்றவை. ஆகையால் அவைகள் வேறு, இவைகள் வேறு.கொச்சைமொழிகளை முதலில் பேசுகின்றவர்கள் யார்? ஒரு கூட்டத்தார் அல்லது ஓர் இடத்தார் அல்ல. கவர்ச்சியிலும் புதுமையிலும் ஈடுபட்டவர்கள் யாரோ, அவர்களே இப்படிக் கொச்சை மொழிகளைப் பேசத்தொடங்குகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே. வாழ்க்கையில் விளையாட்டு உணர்ச்சி உடைய இளைஞர்களே இப்படிப் புதிய கவர்ச்சியான சொற்களைப் படைத்துப் பேசுகின்றார்கள். இவற்றைப் படைப்பதில் ஒருவகை இன்பம் இருக்கின்றது. கேட்பதில் ஒரு வகையான ஊக்கம் இருக்கின்றது. அதனால் இந்தச்சொற்கள் வேகமாக மக்களிடையே பரவுகின்றன. சில சொற்கள் மிகவும் இழிவான, மட்டமான போக்கில் அமைந்துவிடும். அப்படி அமையாமல் காத்துக்கொண்டால், இவற்றை யாரும் வெறுக்க மாட்டார்கள்.ஆனால் ஒன்று, இடப்பேச்சுக்கு நீண்ட வாழ்வு உண்டு. கொச்சைமொழிகள் நெடுங்காலம் வாழ்வதில்லை.காரணம் தெரியுமா? இன்று, கவர்ச்சியான புதுமை வேண்டும் என்று "அவனுக்குப் பூசை விழுந்தது" என்கிறார்கள். இதையே பலமுறை பல ஆண்டுகள் சொல்லிப் பழகிவிட்டால் கவர்ச்சியும் புதுமையும் இல்லாமற் போகின்றன. பழக்கம் எதையும் எப்படிப்பட்டதையும் பழையதாக்கிவிடும் அல்லவா? நேற்றுப் புதிதாக இருந்த சொல், இன்று பழைய சொல் ஆகிவிட்டால், நாளைக்கு வேறொரு புதுச்சொல் வேண்டியதாக ஏற்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பழைய சொல் மறந்து கைவிடப்படுகிறது. அதனால்தான், கொச்சைமொழிகள் நீண்ட காலம் வாழமுடியாமல் அவ்வப்போது மறைந்து போகின்றன.எண்ணம் எழத்து பல்லடம் சிவகுருநாதன்....